×

சேரன்மகாதேவியில் முன்னறிவிப்பின்றி தற்காலிக ரயில்வே கேட் மூடல்-பொதுமக்கள் எதிர்ப்பு முற்றுகை போராட்டம்

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட வடக்குநாலாந்தெரு, தெற்குநாலாந்தெரு, அம்மநாதன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், இங்குள்ள ரயில்வே கிராசிங்கை கடந்து செல்லும் வகையில் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தெற்குநாலாந்தெரு அருகே ரயில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்ல ஏதுவாக ஆளில்லா ரயில்வே கிராசிங் இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே கிராசிங்கை அகற்றி சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் வேகமாக நடந்து வந்தது. மேலும் ரயில்வே கிராசிங் கீழ்புறம் உள்ள பொதுமக்கள் கடந்து செல்ல ஏதுவாக அப்பகுதியில் வயல்களுக்கு மத்தியில் தற்காலிக ரயில்வே கேட் அமைக்கப்பட்டது. முறையாக திட்டமிடுதல் இன்றி கட்டப்பட்ட இந்த சுரங்க ரயில்வே பாதையில் 24 மணி நேரமும் தண்ணீர் ஊற்று அடித்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அப்பகுதியில் மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்.25ல் தற்காலிக ரயில்வே கேட்டை மூடுவதற்கு ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதிக்தயாள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் முடியும் வரை பணிகள் ஏதும் துவங்கப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று எவ்வித முன்னறிவிப்பின்றி ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள தற்காலிக ரயில்வே கேட்டை பூட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தில் திரண்டனர். தகவலறிந்த சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் சுகாதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள்  தேர்தல் முடியும் வரை கேட்டை மூட மாட்டோம் என சப்-கலெக்டர் உறுதியளித்த பிறகும் ரயில்வே துறையினர் கேட்டினை மூடியதாக கொந்தளித்தனர். இதற்கு ரயில்வே ஊழியர்கள் வெறும் பராமரிப்பு பணிக்காக மட்டுமே கேட் மூடப்பட்டதாக தெரிவித்தனர். ரயிலே ஓடாத நிலையில் கேட்டை மூடாமல் பணி செய்யாமல் கேட்டினை பூட்டி ஒத்திகை பார்ப்பதாக கூறி ஆவேசமடைந்தனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு காணலாம் என போலீசார் கூறியதையடுத்து கேட் திறக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post சேரன்மகாதேவியில் முன்னறிவிப்பின்றி தற்காலிக ரயில்வே கேட் மூடல்-பொதுமக்கள் எதிர்ப்பு முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi- ,anti-blockade ,Veeravanallur ,North Nalanderu, ,South Nalanderu ,Ammanathan Koil Street ,Cheranmahadevi Municipality ,Cheranmahadevi ,Dinakaran ,
× RELATED சேரன்மகாதேவி உத்திராசெல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா